டார்ஜிலிங்; முக்கிய தகவல்கள் மற்றும் பார்க்க வேண்டிய இடங்கள்

டார்ஜிலிங் இந்தியாவின் பிரபலமான மலைவாசஸ்தலமாக உள்ளது. இது மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங் மாவட்ட தலைநகராக இருக்கிறது. 

இது மஹாபாரத் மலை தொடரில் அமைந்துள்ளது. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள சுற்றுலாதலம் என்பதால் மனதை மயக்கும்  இயற்கை காட்சிகளால்  சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. இது வட இந்தியாவின் மலைகளின் ராணி என்ற பெயரையும் பெற்றுள்ளது. 

டார்ஜீலிங் 

டார்ஜிலிங் கடல் மட்டத்திலிருந்து 2,042 மீ உயரத்தில் உள்ளது. உண்மையில் தென்னிந்தியாவின் கொடைக்கானல் ஊட்டியை விட சற்று உயரம் குறைவு. இருந்தாலும், டார்ஜிலிங்கில் இருந்து இமயத்தின் பனிபடர்ந்த மலைகள் மற்றும் சிகரங்களை பார்க்க முடியும். ஆனால், ஊட்டி அல்லது கொடைக்கானலில் பனிபடர்ந்த சிகரங்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு இல்லை. 

வெப்பநிலை மற்றும் சீசன்

டார்ஜிலிங் இமயத்தை ஒட்டியுள்ள தால் வருடம் முழுவதும் இதமான வெப்பநிலை நிலவுகிறது. பகலில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 17 டிகிரியாக  உள்ளது. இரவு நேர சராசரி வெப்பநிலை 8 டிகிரியாக உள்ளது. பனிக்காலத்தில் வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழ் செல்வதால் பனிப்பொழிவு ஏற்படுகிறது. இருப்பினும் டார்ஜிலிங்கில் அரிதாக பனிப்பொழிவு ஏற்படுகிறது. ஆனால், டார்ஜிலிங் கின் மற்ற பகுதிகளான டைகர்ஹில் சடங்கு போன்ற இடங்களில் பனிக்காலத்தில் அடிக்கடி பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. 

மார்ச் முதல் மே மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களில் இங்கு இதமான தட்பவெப்பநிலை நிலவும். அந்த காலகட்டத்தில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். 

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவமழைக் காலத்தில் மக்கள் கூட்டம் குறைந்து விடும். அதே போல் கடும் பனிக்காலத்தில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும். 

பரப்பளவு மக்கள் தொகை

டார்ஜிலிங் சுமார் 10.6 சதுர கி. மீ பரப்பளவு உடையது. இதன் மொத்த மக்கள் தொகை 1 லட்சத்து 30 ஆயிரமாக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி சற்று அதிகமாக 10,500/ச.கி.மீ., என்ற  அளவில் உள்ளது. 

கோடைகால தலைநகரம்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது கோடைகாலத்தில் நிலவிய கடும் வெப்பம்  காரணமாக பலருக்கு உடல் நலம் பாதிப்பு அடைந்தது. வெப்பத்தை சமாளிக்க ஆங்கிலேயர்கள் மாற்று இடம் ஒன்றை தேடி வந்தனர்.

அந்த சூழலில் டார்ஜிலிங் கின் இதமான வெப்பநிலை அவர்களுக்கு ஆறுதல் அளித்து வந்தது. அதனால், அது கோடைகால தலைநகராக மாறியது. அதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து இங்கு குடியேறியவர்கள் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாயத்தை மேற்கொண்டனர். அதன் பின்னர் டார்ஜிலிங் வேகமாக வளர்ச்சி அடைய தொடங்கியது. 

1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, இந்நகரம் மேற்கு வங்கம் மாநிலத்துடன் இணைந்தது. பின்னர் மற்ற் மலை நகரங்களான குர்சியாங், கலிம்போன்ங் உள்ளிட்டவை இதனுடன் இணைந்து டார்ஜீலிங் தனி மாவட்டமாக உருவானது..

அன்று முதல் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து தற்போது இந்தியாவின் புகழ் பெற்ற மலைவாசஸ்தலமாக உள்ளது. 

டார்ஜிலிங் தேயிலை தோட்டங்கள்

டார்ஜிலிங்கில் உள்ள பசும் தேயிலை தோட்டங்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. 

நகரின் மையப் பகுதியில் இருந்து சுமார் 2 கி. மீ., தொலைவில்  சிறிதும் பெரிதுமாக 80 தேயிலை தோட்டங்கள் உள்ளன. இவற்றின் மொத்த பரப்பளவு 17,500 ஹெக்டராக உள்ளது. தேயிலை தோட்டங்களில் மேகங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி ரம்மியமாக இருக்கும்.



இதமான குளிர்ந்த காற்று வீசும் வேளையில் தேயிலை தோட்டஙகளின் அழகு நம்மை கவர்ந்திழுக்கும். அதே நேரத்தில் மற்றொரு பக்கம் கம்பீரமாக தோற்றம் அளிக்கும் இமயமலை சிகரங்கள் நம்மை பிரம்மிக்க வைக்கும். 

இமாலயன் ரயில்வே

1879 மற்றும் 1881 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட இந்த ரயில் பாதை மிகவும் பிரபலமானதாகும். இரண்டு அகலம் கொண்ட இந்த ரயில் பாதை 88 கி. மீ., நீளம் கொண்டது. 

இது புது ஜலபாய்குரியில் இருந்து தொடங்கி டார்ஜிலிங் வரை செல்கிறது. இந்த ரயில் பாதையில் பயணிப்பது மிகவும் திரில்லிங்கான அனுபவத்தை கொடுக்கும். 

வழி நெடுகிலும் இயற்கை காட்சிகளின் அழகு நம் மனதை வசீகரிக்கும். தூரத்தில் தெரியும் அருவிகள், உயரமான மரங்கள், வண்ண மலர்கள் என இயற்கை அழகுக்கு பஞ்சமே இல்லை. இது செங்குத்தான ஏற்றங்கள், இறக்கங்கள் மற்றும் சுழல் வளைவுகளுடன்  கூடிய இமயமலை ரயில் பாதை ஆகும்.

இது இமயமலையின் நுழைவாயில் என்ற பெருமையைகொண்டது. 



டார்ஜீலிங் ரயில் 

மேலும், இந்திய ரயில்வே நிறுவனத்தால் நீராவி வண்டியால் இயக்கப்படும் புகைவண்டியாக உள்ளது.

19 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த மிகச்சிறிய நான்கு சக்கர நீராவி வண்டிகளால் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

1999ம்  ஆண்டு இமாலயன் ரயில்வே யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. 

பிரிட்டிஷ் முறை கல்வி

டார்ஜிலிங்கில் உள்ள பெரும்பாலான பொதுப் பள்ளிகள் ஆங்கில முறை கல்வியை பின்பற்றுவதால், இந்தியாவின் பல பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அவை மாணவர்களை ஈர்க்கின்றன. இன்றளவும் இங்கு உள்ள உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். 

டார்ஜிலிங்கில் பார்க்க வேண்டிய இடங்கள்

டைகர் ஹில்ஸ்

இது டார்ஜிலிங்கிற்கு அருகில் உள்ள இயற்கை எழில் மிகுந்த சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து 2590 மீட்டர் உயரம் கொண்ட இந்த இடத்தில் இருந்து எவரெஸ்ட் மற்றும் கின்ஜன்ஜங்கா சிகரங்களை காணலாம். அதிகாலையில் இங்கு சூர்யோதயத்தை கண்டு ரசிக்கலாம். அது வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மேலும் அருகில் உள்ள சென்செல் வனவிலங்கு சரணாலயம் சென்று இயற்கயான சூழலில் மிருகங்களை கண்டு ரசித்து  வரலாம். 

பட்டாசியா லூப்

இது டார்ஜிலிங் கில் இருந்து சுமார் 5 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள சுருளான ரயில் பாதை யில் இமாலயன் ரயில் 360 டிகிரி சுற்றி இறங்குகிறது. அவ்வாறு சுற்றி சுமார் 1000 அடி வரை இறங்கவோ அல்லது ஏறவோ செய்கிறது. 

ஹேப்பி வேலி டீ எஸ்டேட்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,800 அடி உயரத்தில் இந்த டீ எஸ்டேட் உள்ளது. இது டார்ஜிலிங்கில் உள்ள இரண்டாவது பழமையான டீ எஸ்டேட் ஆகும். இங்குள்ள தேயிலை தொழிற்சாலையில் டீ தயாரிப்பு முறைகளை தெரிந்து கொள்ளலாம். டார்ஜிலிங்கில் இருந்து சுமார் 2 கி. மீ., பயணம் செய்தால் இந்த இடத்தை அடையலாம். 

தீன்சுலா

இது டார்ஜிலிங்கில் இருந்து 32 கி. மீ., தொலைவில் உள்ள மலைகள் சூழ்ந்த அழகான இடம். கடல் மட்டத்திலிருந்து 5550 அடி உயரத்தில் உள்ளது. தீன் என்றால் இந்தியில் மூன்று என்று பொருள். சுலா என்றால் அடுப்பு என்று அர்த்தம். மலைகள் அருகருகே இணைந்து அடுப்புகள் போன்ற தோற்றத்தை கொடுப்பதால் இந்த இடத்திற்கு இப்பெயர் வந்தது. 

பத்மஜா நாயுடு உயிரியல் பூங்கா

டார்ஜிலிங்கில் இருந்து சுமார் மூன்று கி. மீ., பயணம் செய்து இந்த உயிரியல் பூங்காவை அடையலாம். 

இங்கு சைபீரியா நாட்டு புலிகள், சிவப்பு பான்டா கரடிகள், இமாலய கருப்பு கரடிகள், பனிச்சிறுத்தை கள் மற்றும் பல்வேறு அரிதான பறவைகளை காணலாம். 

டார்ஜிலிங் ஷாப்பிங்

நகரின் மையத்தில் அமைந்துள்ள கடைத்தெருவில் உள்ள கடைகளில் வேறு எங்கும் கிடைக்க முடியாத திபெத் மற்றும் கலாச்சார கலைப் பொருட்களை வாங்கலாம். இங்குள்ள கடைகளில் உலகப் புகழ் பெற்ற டார்ஜிலிங் டீத்தூள் வாங்க முடியும். இங்குள்ள  நாத்முல்ஸ் என்ற டீக்கடை மிகவும் பிரபலம். இதே ரோட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு புத்தக கடையில் தேவையான புத்தகங்கள் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். 

புத்தமத கோயில்கள்

டார்ஜிலிங்கில் உள்ள புத்தமத கோவில்கள் தவிர்க்க கூடாதவை. 

இங்குள்ள கூம், புடியா புஸ்டி, அலூபரி கோம்பா கோவில்கள் பிரபலமானவை. கூம் புத்தமத கோவிலில் உள்ள 15 அடி உயர புத்தர் சிலை இங்க பிரசித்தம். புடியா புஸ்டி இங்குள்ள பழமையான கோவிலாகும். கோவிலை சுற்றி ஷாப்பிங் செய்ய நிறைய கடைகள் உள்ளன. அலூபரி கோம்பா என்ற மற்றொரு கோவில் ஆராய்ச்சி நிலையம் அருகில் உள்ளது. இங்கு அழகான இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். 

டீஸ்டா ஆற்றில் ராப்டிங்

டார்ஜிலிங் அருகே பாயும் டீஸ்டா ஆற்றில் ராப்டிங் செல்வது தனி அனுபவமாகும். இங்கு ஒன்று முதல் நான்கு நிலைகள் வரை ராப்டிங் செலுத்தப்படுகிறது. நான்காம் நிலையில் வேகமும் ஆபத்தும் இருப்பதால் அனுபவம் வாய்ந்த வர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 

கேபிள் கார் பயணம்

டார்ஜிலிங்கில் ரோப் கார் பயணம் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரோப் காரிலிருந்து ஒரு பக்கம் பனி படர்ந்த இமயமலை சிகரங்களும் மற்றொரு பக்கம் பசும் தேயிலை தோட்டங்களும் நம் மனதை மயக்கும். மையப் பகுதியில் இருந்து 3 கி. மீ., பயணம் செய்து இவ்விடத்தை அடையலாம். 

இமாலயன் மலையேற்ற பயிற்சி நிறுவனம்

இந்த நிறுவனம் டார்ஜிலிங்கில் இருந்து 4 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. 1954ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி இந்த மலையேற்ற பயிற்சி நிறுவனம் நிறுவப்பட்டது. இங்கு  பயிற்சியாளர்கள் எளிதான மற்றும் கடினமான கோர்ஸ்களில் சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளலாம். இளைஞர்கள் இடையே மலையேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இது தோற்றுவிக்கப்பட்டது. 

நைட்டிங்கேல் பார்க்

டார்ஜிலிங்கில் இருந்து சுமார் 2 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டது. கடந்த 2011ல் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இங்குள்ள பிரம்மாண்ட சிவன் சிலை மற்றும் மியூசிக்கல் நீரூற்று பார்வையாளர்களை கவர்கிறது. 

ராக் கார்டன்

இது டார்ஜிலிங்கில் தவிர்க்க கூடாத முக்கிய இடமாகும். நகரின் மையப் பகுதியில் இருந்து சுமார் 3 கி. மீ., தூரம் பயணம் செய்தால் இந்த அழகான பூங்காவை அடையலாம். பாறை மற்றும் மண் கலந்த செங்குத்தான மலைச்சரிவில் படிப்படியாக மலர் தோட்டங்கள் அமைந்துள்ளன. மேல் பகுதிக்கு செல்ல கம்பி வேலிகளுடன் எளிதான, பாதுகாப்பான நடைபாதை அமைத்துள்ளார்கள். இதமான தட்பவெப்ப நிலையில் பூங்கா வை சுற்றி பார்ப்பது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

சிங்காலிலா தேசிய பூங்கா

டார்ஜிலிங்கில் இருந்து சுமார் 20 கி. மீ., தொலைவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் மனதை கொள்ளை கொள்ளும் இயற்கை காட்சி களை கொண்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் திரில்லிங்கான விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். 

சந்தக்பு  சிகரம்

இது நேபாள எல்லையில் அமைந்துள்ள மிக உயர்ந்த சிகரமாகும். டார்ஜிலிங்கில் இருந்து சுமார் 27 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. இது டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள மிக உயர்ந்த சிகரமாக உள்ளது. இங்கிருந்து பிரம்மிப்பை உண்டாக்கும் இமயமலையின் கம்பீரத்தை ரசித்து மகிழலாம்

தங்கும் வசதி

இந்தியாவின் புகழ் பெற்ற மலைவாசஸ்தலமாக இது இருப்பதால் சீசன் நேரத்தில் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால், நூற்றுக்கணக்கான பட்ஜெட் மற்றும் சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. பெரும்பாலான பட்ஜெட் ஹோட்டல்களில் காலை உணவும் சேர்த்து வழங்குவதால் சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

அருகில் உள்ள ரயில் மற்றும் விமான நிலையங்கள்

டார்ஜிலிங்கிற்கு அருகில் உள்ள ரயில் நிலையம் நியூ ஜல்பைகுரி. இது இந்தியாவின் அனைத்து பெரிய

நகரங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகில் உள்ள விமான நிலையம்நிலையம்.பேக்டோக்ரா விமான நிலையம் மிக அருகில் உள்ளது. இது டார்ஜிலிங்கில் இருந்து 96 கி. மீ.தொலைவில் உள்ளது. 

Comments