நீரிழிவு நோய் உள்ளவர்கள் சப்பாத்தி நிறைய சாப்பிடலாமா?

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சப்பாத்தி போன்ற கோதுமை உணவினைஅன்றாட உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

Chapati

ஏனென்றால், நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் அரிசி மற்றும் அரிசியினால் தயார் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து கோதுமையால் தயாரிக்கப்பட்ட உணவுகளை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம் என்றும் இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடாது என்று ஒரு கருத்து நிலவுகிறது.

உண்மையில் சப்பாத்தியை நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் விருப்பத்திற்கு தகுந்தவாறு நிறைய உண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

இதை விட முக்கிய விஷயம் என்னவென்றால் அரிசியை நாம் சற்று அதிகமாக உட்கொள்ளும் போது எந்த அளவு ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுமோ அதே அளவு கோதுமையை அதிக அளவுஎடுத்துக் கொள்ளும் போதும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூட வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் கிளைசெமிக் இண்டக்ஸ் 70 ஆக உள்ளது. ஆனால், அரசியின் கிளைசெமிக் இண்டெக்ஸ் 66 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. கிளைசெமிக் இண்டெக்ஸ் (சர்க்கரை உயர்த்தல் குறியீடு) என்பது ஒரு உணவுப் பொருளானது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவினை எந்த அளவுக்கு உயர்த்துகிறது என்பதை குறிக்கிறது. 

அந்த வகையில் கோதுமையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் அரிசியை விட சற்று கூடுதலாகவே உள்ளது. எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் கோதுமையையும் அளவாகவே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகிறது

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம்?

மருத்துவர்கள் கூற்றுப்படி நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்த நாம் அன்றாடம் உட்கொள்ளும் சப்பாத்தியின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியது அவசியமாகிறது.

சில வீடுகள் அல்லது கடைகளில் சப்பாத்திகளை பெரிய அளவில் தயாரிப்பார்கள். அவ்வாறு பெரிய வடிவில் உள்ள சப்பாத்திகளை 3 எடுத்துக் கொண்டாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடி விட வாய்ப்பு உள்ளது. எனவே, சப்பாத்திகளை நடுத்தர அளவில் அதாவது 12 செ. மீ., விட்டத்தில் இருக்கும்படி தயார் செய்து எண்ணிக்கையை பொறுத்தவரை 3க்கு மிகாமல் உண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட கோதுமையிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்

கோதுமையை சுத்தம் செய்து தயாரிக்கப்படும் உணவு வகைகளான மைதா, ரவை போன்றவை நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கோதுமையை சுத்தம் செய்யும் போது அதிலுள்ள முக்கிய ஊட்ட சத்துக்களான எண்டோஸ்பெர்ம் உள்ளிட்ட நார்ச்சத்துக்கள் நீக்கப்பட்டு விடுகின்றன. இதனால், மைதாவில் மாவுச்சத்து அதிக அளவில் இருக்கும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கூட்டுவது மட்டுமின்றி உடல் பருமன் மற்றும் இதய நோய்களையும் ஏற்படுத்துகிறது.

இதன் காரணமாக மைதா, ரவை போன்ற வற்றிலிருந்து தயார் செய்யப்பட்ட புரோட்டா, பீட்சா, சமோசா, நூடுல்ஸ் போன்ற உணவு வகைகளை நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

சப்பாத்திக்கு ஏற்ற 'சைட் டிஷ்' எது?

சப்பாத்திக்கு தேங்காய் சட்னி, டால், உருளைக்கிழங்கு மசால், தக்காளி குருமா என்று பல வகைகளில் 'சைட் டிஷ்' தயார் செய்யலாம்.

இவற்றில் நீரிழிவு நோயாளிகள் டால் மற்றும் தக்காளி குருமாவை தேர்வு செய்யலாம். டால், புரதம் நிறைந்த சத்துணவாக இருப்பதால் அது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல ஆரோக்கிய பலன்களை கொடுக்கிறது.


தக்காளி, நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்ற பழம் என்று கூறப்படுகிறது.  இதிலிருந்து நம் விருப்பத்திற்கு தகுந்தவாறு ‛சைட் டிஸ்’ செய்யலாம். 

தக்காளியில் விட்டமின்கள் ஏ, பி, சி போன்றவை உள்ளன. பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு மாவுச்சத்து போன்றவை உள்ளன. மாவுச்சத்து சிறிதளவே காணப்படுவதால் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

அனைவருக்கும் ஏற்ற நல்ல உணவு பழக்கம்

காலை உணவில் குறைந்த அளவு சப்பாத்தி என்பது நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டும் தான் என்று கூற முடியாது. இந்த நல்ல பழக்கத்தை ஆரோக்கியமாக உள்ள அனைவரும் கடைப்பிடிக்கலாம்.

ஏனென்றால்,கோதுமையில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. கோதுமையில் பி1, பி2, பி6 விட்டமின்களும், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, காப்பர், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், மாங்கனீசு, துத்தநாகம், சல்ஃபர், குரோமியம் போன்றவையும் உள்ளன. 

ஊட்டசத்துக்கள் நிறைந்த கோதுமை உணவான சப்பாத்தியினை அன்றாட வாழ்வில் அளவாக உண்டு வந்தால், நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். உடல் பருமன், பசியின்மை, சோர்வு, ரத்த சோகை, ஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

Comments