சிட்ரஸ் பழங்களின் ஆரோக்கிய பலன்கள்

ரூட்டேசி குடும்பத்தைச் சேர்ந்த குறு மரங்களில் பெறப்படும் புளிப்புச் சுவை உள்ள பழங்கள் சிட்ரஸ் பழங்கள் ஆகும். இவை பொதுவாக புளிப்பு மற்றும் லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள் 

எலுமிச்சை, ஆரஞ்சு,, நெல்லி, நாரத்தை, சாத்துக்குடி, பப்ளிமாசு போன்றவற்றை சிட்ரஸ் பழங்களுக்கு உதாரணமாக கூறலாம். புளிப்பும் இனிப்பும் கலந்து இருப்பதால் பெரும்பாலான மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. புளிப்பு சுவைக்கு காரணம் அவற்றிலுள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் விட்டமின் சி ஆகும்.

சிட்ரஸ் பழங்களின் ஆரோக்கிய பலன்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள விட்டமின் 'சி' மற்றும் சிட்ரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது. இவை உடம்பில் வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. வைரஸ், பாக்டீரியாக்களால் பரவும் தொற்று நோய்களிடம் இருந்து நம்மை காக்கிறது. 

குறிப்பாக விட்டமின் 'சி' பாதுகாப்பான வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. விட்டமின் 'சி' குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி நோயை குணப்படுத்துகிறது. எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றில்  இருந்து தயாரிக்கப்படும் சூப்புகளை குடிப்பதால் குளிர் காலங்களில் ஏற்படக் கூடிய சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை தவிர்க்கலாம்.

இயற்கையில் அமிலத்தன்மை கொண்ட இவ்வகை பழங்கள் ஜீரணத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. ஈறு மற்றும் பல் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.கண்கள், தோல் மற்றும் முடி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடல் எடை  அதிகரிக்காமல் தடுக்கிறது.

பெண்கள் கர்ப்ப காலத்தில் இவற்றை உண்டால் சிசு மற்றும் தாய் ஆரோக்கியத்தை காக்கிறது.நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

இயற்கையான மற்றும் செயற்கையான சிட்ரிக் அமிலங்கள்

நடைமுறையில் சிட்ரிக் அமிலம் மற்றும் விட்டமின் சி இயற்கையாகவும் செயற்கையாகவும் கிடைக்கிறது.

சிட்ரிக் அமிலம் இயற்கையாக எலுமிச்சையில் அதிகம் உள்ளது. இயற்கையான சிட்ரிக் அமிலங்கள் நம் உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. இது சிட்ரஸ் பழங்களில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை காக்க உதவும். சிட்ரிக் அமிலத்தை உட்கொள்ளும் போது அது பொட்டாசியம் சிட்ரேட்டாக மாறுவதால் சிறுநீரகம் நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும், சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை தவிர்க்கிறது. ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.

இருப்பினும், சிட்ரிக் அமிலத்தை செயற்கையாகவும் தயாரிக்கிறார்கள். ஆனால், செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சிட்ரிக் அமிலத்தை உட் கொள்வதால் பெரும்பாலான மக்களுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் உண்டாகின்றன. ஒரு சிலருக்கு ஒவ்வாமை காரணமாக தலைவலி, உடல் சோர்வு, போன்றவை ஏற்படுகிறது. அதே போல செயற்கை முறையில் பெறப்படும் விட்டமின் ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க சிட்ரஸ் பழங்களை நாம் அன்றாடம் சேர்த்து கொள்ளலாம்.

நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்றவை சிட்ரஸ் பழங்கள்

நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் நல்ல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் நீரிழிவு உள்ளவர்கள் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.

சிட்ரஸ் பழச்சாறு மற்றும் ஊறுகாய்

பெரும்பாலான சிட்ரஸ் பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் இருப்பதால் இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகளை மக்கள் விரும்பி அருந்துகின்றனர். எலுமிச்சை, நாரத்தை மற்றும் நெல்லிக்காயிலிந்து தயாரிக்கப்படும் ஊறுகாய் தென்னிந்தியாவில் மக்களின் மதிய உணவில் ஒரு அங்கமாக இருக்கிறது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள மற்ற சத்துகள்

சிட்ரஸ் பழங்களில் விட்டமின் 'சி', சிட்ரிக் அமிலம் தவிர உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்ட சத்துக்கள் நிறைய உள்ளன. உதாரணமாக எலுமிச்சையில் உள்ள சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு போன்றவை ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.

சாத்துக்குடியில் பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், போன்ற சத்துகள் நிறைய உள்ளன.

 நெல்லியில்  காப்பர், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், சிறிதளவு கொழுப்பு போன்றவை உள்ளன.

ஆரஞ்சு பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், சோடியம், கால்சியம், அதிக அளவு விட்டமின் 'சி' உள்ளன.

Comments