இந்தியாவின் புகழ் பெற்ற மலை வாசஸ்தலங்களில் கொடைக்கானலும் ஒன்று. இது மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது
| கொடைக்கானல் |
கொடைக்கானலின் சிறப்பு மற்றும் அமைவிடம்
'ஜில்' என்று வீசும் காற்று, விண்ணை முட்டும் மலைச் சிகரங்கள், மேகம் தவழும் மலைகள், கண்கவர் பூங்காக்கள், மனதை மயக்கும் ஏரிகள், எழில்மிகு அருவிகள் இவை தான் கொடைக்கானலின் அடையாளங்கள்.
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைத் தொடரில் இது அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இங்கு கோடை காலத்திலும் 30ºC முதல் 20ºC வரை வெப்பநிலை நிலவும்
உங்கள் முகத்தில் வீசும் இதமான, புத்துணர்ச்சியூட்டும் தென்றலானது மலையேற்றம், சைக்கிள் ஓட்டுதல், படகு சவாரி போன்ற விஷயங்களுக்கு ஏற்றதாக உள்ளது. பூத்துக் குலுங்கும் வண்ணமயமான பூக்கள் இயற்கை ஆர்வலர்களின் விருப்பங்களை நிறைவேற்றுகின்றன.
அதனால் கோடைக்காலத்தில் கொடைக்கானலில் உள்ள ஹோட்டல்கள் அனைத்தும் எப்போதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. எனவே, கோடைகாலத்தில் ஹோட்டல்களில் முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும்.
கோடை மாதங்கள் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் வரை நீடிக்கும், இந்த நேரத்தில் கொடைக்கானல் வானிலை மிதமானதாக இருக்கும் என்பதால் கொடைக்கானலில் பல இடங்களை சுற்றி பார்ப்பது உண்மையில் ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.
இருப்பினும் வருடம் முழுவதும் கொடைக்கானலின் அழகை ரசிக்க உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு 12 ஆண்டுளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப்பூ மிக அழகாக இருக்கும்.
கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்கள்
இயற்கையின் கொடையாக உள்ள கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. ஒரு சிலவற்றை பற்றி நாம் இங்கு பார்கலாம்
கொடைக்கானல் ஏரி
நகரின் மையப் பகுதியில் உள்ள ஏரியை அடையும் போது நாம் சுவிஸ் போன்ற வெளிநாட்டில் இருப்பது போன்ற பிரமை ஏற்படும். அந்த அளவுக்கு ஏரியைச் சுற்றி அமைந்துள்ள இடம் நம்மை இயற்கை அழகில் சொக்க வைக்கும்.அந்த ஏரியில் குடும்பத்துடன் படகு சவாரி ஏரி செய்வது மறக்க முடியாத சந்தோஷத்தை கொடுக்கும்.
செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் ஈடுபடுவார்கள். ஏரிக் கரையில் உள்ள கடைகளில் ஹோம் மேட் சாக்லேட்கள் கிடைக்கும்.
'கோக்கர்ஸ வாக்’
பஸ்நிலையம் அருகேயே அமைந்துள்ள அற்புதமான இடம். மலைச்சரிவில் அமைக்கப்பட்ட 1-கிலோமீட்டர் நடைபாதையின் வழியாக நடந்து சென்றால் கொடைக்கானல் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். பசுமை மரங்கள் அடர்ந்த அழகான பள்ளத்தாக்கு பகுதிகள், தவழும் மேகங்கள், ஜில் என்ற காற்று என அனைத்தும் நம் மனதை கொள்ளை கொள்ளும் . இதற்கு நுழைவுக் கட்டணம் உண்டு. மறு முனையில் அமைந்துள்ள டெலஸ்கோப் ஹவுஸ் வாயிலாக மலைப் பகுதியின் பல்வேறு இடங்களை காணலாம்.
‛பிரையன்ட்’ பூங்கா
கோக்கர்ஸ வாக் மற்றும் கொடைக்கானல் ஏரிக்கு அருகே அமைந்துள்ள அழகான பூங்கா. இங்கு பல வகையான வண்ண மலர்கள், பல அபூர்வ தாவரங்களை காணலாம். குறிப்பாக பல வகையான ரோஜாக்களை கண்டு ரசிக்கலாம். இதற்கும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும். பூங்காவின் மத்தியில் உள்ள கண்ணாடி வீட்டில் நம் வாழ்நாளில் கண்டிராத பல அதிசய தாவரங்களை பார்க்கலாம்.
பிரையன்ட் பூங்காவிற்குச் செல்ல கோடைக்காலம் சரியான நேரமாகும், ஏனெனில் வருடாந்திர தோட்டக்கலை கண்காட்சி மே மாதம் நடைபெறுகிறது. அப்போது உலகம் முழுவதிலுமிருந்து பல வண்ண ரோஜாக்கள், கற்றாழை மற்றும் கவர்ச்சியான தாவரங்கள் காட்சிப்படுத்தப்படும்.
குறிஞ்சி ஆண்டவர் கோவில்
கொடைக்கானல் மையப் பகுதியில் இருந்து சுமார் 3 கி. மீ., தூரத்தில் அமைந்துள்ளது இந்த கோவில். பஸ் நிலையத்தில் இருந்து கிடுகிடுவென சரிவாக இறங்கும் அண்ணா சாலை வழியாக நடந்தே கோவிலை அடையலாம். கோவிலுக்கு அருகிலுள்ள செட்டியார் பூங்காவும் இங்கு தவிர்க்க முடியாத இடங்களில் ஒன்றாகும்.
பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு இந்த பூங்காவைப் பற்றி தெரியாது என்பதால் ஒரு சில நாட்களில் இங்கு கூட்டம் மிக குறைவாக இருக்கும். கூட்டம் குறைவான நாட்களில் இங்கு வீற்றிருக்கும் இறைவன் முருகப்பெருமானை வணங்குவது பக்தர்களுக்கு அலாதியான சந்தோஷத்தையும் மன அமைதியையும் கொடுக்கும். .
மற்ற இடங்கள்
'கோக்கர்ஸ் வாக்', 'பிரையன்ட் பூங்கா', கொடைக்கானல் ஏரி, 'லேக் வியூ பாயின்ட்', குறிஞ்சி ஆண்டவர் கோயில் போன்ற இடங்கள் கொடைக்கானலைச் சுற்றி அமைந்துள்ளன. இவற்றை நாம் நடந்து கூட சென்று விடலாம்.
ஆனால், பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறைகள், 'பைன் பாரஸ்ட்', 'மோயர் பாயிண்ட்', குணா குகை, 'பேரிஜம் ஏரி', வெள்ளி அருவி/மற்றும் டால்பின் நோஸ் போன்ற இடங்கள் சற்று தொலைவில் அமைந்துள்ளன. இவற்றை சுற்றி பார்க்க வாடகை கார் ஏற்பாடு செய்து கொள்ளலாம். நம் சொந்த காரிலேயே இங்கு வந்தால் இது போன்ற இடங்களை சுற்றி பார்க்க வசதியாக இருக்கும். வெள்ளி அருவியை நாம் கொடைக்கானலுக்கு வரும் வழியிலேயே கண்டு ரசிக்கலாம்.
பசுமை பள்ளத்தாக்கு, தூண் பாறைகள், 'மோயர் பாயிண்ட்' போன்ற இடங்கள் மிக அழகானவை. மலை முகடுகளை கேங்கள் தழுவிச் செல்லும் காட்சி மிக ரம்மியமாக இருக்கும். இது தவிர பேரிஜம் ஏரி, பைன் பாரஸ்ட் போன்ற இடங்களும் இயற்கை அழகிலும், அமைதியிலும் நம்மை மயக்கும்.
தங்கும் வசதி
கொடைக்கானலில் நூற்றுக்கணக்கான ஹோட்டல்கள் உள்ளன. பட்ஜெட் ஹோட்டல்கள், பைப் ஸ்டார் ஹோட்டல்கள் என பல வகையான ஹோட்டல்கள் ஏரியைச் சுற்றிலும் அல்லது சற்று தொலைவிலும் அமைந்துள்ளன. நம் பொருளாதார வசதிக்கு தகுந்த ஹோட்டல்கள் ரூம்களை ஆன்லைனிலோ அல்லது நேரிடையாகவோ புக் செய்யலாம். ஆனாலும், ஹோட்டல்களில் முன் பதிவு செய்த பின்னர் இங்கு சுற்றி பார்க்க வருவது நல்லது.
அருகில் உள்ள ரயில் மற்றும் விமான நிலையங்கள்
கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மதுரை ஆகியவை கொடைக்கானலுக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்கள். மதுரை (120 கி.மீ) மற்றும் திருச்சிராப்பள்ளி (250 கி.மீ) ஆகியவை கொடைக்கானலுக்கு அருகில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் ஆகும்


Comments
Post a Comment