விக்டோரியா அருவி உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. மழைக்காலத்தில் உலகிலேயே பெரிய அருவி என்று சொல்லும் வகையில் அதிக அளவு நீர் இங்கு கொட்டுகிறது.
![]() |
| விக்டோரியா அருவி |
அமைவிடம், நீளம் மற்றும் அகலம்
இந்த அருவி ஆப்பிரிக்கா வின் ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளின் எல்லைப் பகுதியில் ஸாம்பிசி ஆற்றில் அமைந்துள்ளது. விக்டோரியா அருவி 1700 மீட்டர் அகலம் கொண்டது. உயரம் 128 மீட்டராக உள்ளது.
யுனெஸ்கோ அங்கீகாரம்
உலகின் 7 இயற்கை அதிசயங்களில் ஒன்றாக இது இருக்கிறது. மழைக்காலத்தில் உலகின் மிகப்பெரிய அருவி என்பதால் 1989ம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமக அறிவிக்கப்பட்டது.
இவ்வளவு பிரம்மாண்டமான விக்டோரியா அருவிக்கு மோசி ஓவா துன்யா என்று மற்றொரு பெயரும் உள்ளது. 'மோசி ஒ துன்யா' என்றால் புகையும் இடியும் என்று அர்த்தம். இடி முழக்கத்துடன் நீர்ப்புகையுடன் இருப்பதால் உள்ளூர் மக்களால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. 'மோசி ஓவா துன்யா' என்பது ஆப்பிரிக்க மொழியில் இருந்து வந்த வார்த்தை ஆகும்.
பெயர் மாற்றம்
துவக்கத்தில் உள்ளூர்வாசிகளால் 'மோசி ஓவா துன்யா' என்று அழைக்கப்பட்ட அருவி பின் நாட்களில் பெயர் மாற்றம் கண்டது. 1855ல் இப்பகுதிக்கு வந்த டேவிட் லிவிங்ஸ்டன் என்ற ஸ்காட்லாந்து பயணி இதன் பெயரை மாற்றி விக்டோரியா அரசியின் பெயரை வைத்தார். அதன் பின்னர் விக்டோரியா என்ற பெயரே நிலைத்து விட்டது.
விக்டோரியா அருவியின் 5 பகுதிகள்
விக்டோரியா அருவி டெவில் அருவி, மெயின் மற்றும் ரெயின்போ அருவி, ஹார்ஸ் ஷு அருவி, கிழக்கு அருவி என 5 பாகங்களை கொண்டது.
இவற்றில் முதல் 4 பகுதிகள் ஜிம்பாப்வே நாட்டின் பகுதியில் உள்ளன. கிழக்கு அருவி மட்டும் ஜாம்பியா பகுதியில் அமைந்துள்ளது.
டெவில் அருவி
இந்த அருவி ஜிம்பாப்வே நாட்டின் எல்லையில் உள்ளது.சுமார் 229 அடி உயரம் கொண்ட அருவியின் அருகே உள்ள தீவு பகுதியில் உள்ளூர்வாசிகள் மத நம்பிக்கை தொடர்பான பல்வேறு சடங்குகளை மேற்கொள்வதால் இப்பெயரை கொண்டுள்ளது.
மெயின் மற்றும் ரெயின்போ அருவிகள்
இவை ஜிம்பாப்வே நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளன. அருவியின் பெரும்பாலான நீர் இப்பகுதியில் தான் கொட்டுகிறது. அருவியின் உயரம் 305 அடியாக இருக்கிறது. நீர் அதிக அளவில் கொட்டுவதால் வெயில் நேரத்தில் வானவில்கள் தோன்றி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும். இந்த இரு அருவிகளும், டெவில் அருவியும் மற்ற இரு அருவிகளை காட்டிலும் உயரம் குறைவாக கோடைகாலத்தில் கூட தண்ணீர் கொட்டுகிறது.
ஹார்ஸ் ஷு அருவி
இதுவும் ஜிம்பாப்வே நாட்டில் அமைந்துள்ளது. ஆனால், மெயின் மற்றும் ரெயின்போ அருவியை விட சுமார் 6 அடி உயரமாக உள்ளது. அதாவது இந்த அருவியின் உயரம் 311 அடி. கோடை காலத்தில் நீர் குறையும் போது புவியீர்ப்பு காரணமாக பெரும்பாலான நீர் மெயின் அருவிக்கு சென்று விடும். இதன் காரணமாக கோடையில் இது வறண்டு விடும்.
கிழக்கு அருவி பகுதி
இது ஜாம்பியா நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. விக்டோரியா அருவியின் மொத்த அழகை யும் ரசிக்க விரும்பினால் நாம் இங்கு வர வேண்டும். வெயில் நேரத்தில் இங்கும் வானவில் தோன்றி மனதை மயக்கும்.
![]() |
| விக்டோரியா அருவி |
விக்டோரியா தேசிய பூங்காக்கள்
விக்டோரியா அருவியின் இரு கரைப் பகுதியிலும் புகழ்பெற்ற இரண்டு தேசிய பூங்காக்கள் உள்ளன.
ஜாம்பியா நாட்டு பகுதியில் உள்ள தேசிய பூங்கா 'மோசி ஓவா துன்யா' என்றும் ஜிம்பாப்வே நாட்டு பகுதியில் அமைந்துள்ள பூங்கா விக்டோரியா தேசிய பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டு பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன.
'மோசி ஓவா துன்யா' தேசிய பூங்கா
ஜாம்பியா நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியின் அழகை பூங்கா சூழலில் கண்டு ரசிக்க முடியும்.
அருவி மட்டுமில்லாமல் அருகில் உள்ள ஹோட்டல்களில் தங்கி பல்வேறு ஆப்பிரிக்க விலங்குகள் மற்றும் பறவைகளை அவற்றின் இயற்கை சூழலில் கண்டு ரசிக்கலாம். 'கேம் டிரைவ்' மூலமாக நீர்யானைகள், முதலைகள், ஆப்பிரிக்க யானைகள், வெள்ளை காண்டாமிருகங்கள் போன்றவற்றை பாதுகாப்பான முறையில் கண்டு மகிழலாம். இது வரை நம் வாழ்நாளில் பார்த்திராத பறவைகளையும் பார்த்து ரசிக்கலாம். கேம் டிரைவின் போது ஆப்பிரிக்க நாட்டின் உணவு மற்றும் சிற்றுண்டி வகைகளையும் ருசித்து பார்க்கலாம்.
மேலும், பூங்காவுக்கு அருகில் உள்ள விடுதிகளில் நம் வசதிக்கு தகுந்தவாறு அறைகளை வாடகைக்கு எடுத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம்.
விக்டோரியா அருவி தேசிய பூங்கா
ஜிம்பாப்வே நாட்டின் எல்லையில் அமைந்துள்ள இது ஜாம்பியா நாட்டின் மோசி ஓவா துன்யா பூங்காவை விட பரப்பளவில் குறைந்தாக உள்ளது. மொத்தம் 23 சதுர கி. மீ., பரப்பளவு கொண்டது.
இந்த பூங்காவின் சிறப்பம்சமாக நீர்வீழ்ச்சியில் இருந்து சிதறும் நீர்த் திவலைகளை ஆதாரமாக கொண்டு வளரும் மழைக்காடுகளை கூறலாம். இது பனை, பன்னம் , லியானா கொடிகள் மற்றும் ஏனைய இடங்களில் காண முடியாத மரங்களையும் கொண்டுள்ளது. இந்த தாவரங்களின் ஆராய்ச்சி மேற்கொள்பவர்களுக்கு சிறந்த இடமாக உள்ளது.
பூங்காவில் உள்ள முதலை பண்ணையில் பார்வையாளர்கள் வண்டிகளிலோ நடந்தோ பயணம் செய்து ஆபிரிக்க யானை, கேப் எருமை, தெற்கு வெள்ளை காண்டாமிருகம், நீர்யானை மற்றும் பல்வேறு வகையான மான்களைப் பார்க்க முடியும். குளங்களில் முதலைகளையும் பார்க்கலாம் இந்த மிருகங்களை பாதுகாப்பாக கண்டு ரசிக்கலாம்.
அருவியின் இப்பகுதியிலும் தங்கும் விடுதிகள் உள்ளன. மேலும், வாகனங்களை வாடகைக்கு பிடித்து காட்டு பகுதியில் உள்ள விலங்குகளை அவற்றின் வாழும் சூழலில் காணலாம்.
அருவியின் அழகை இங்கு அமைக்கப்பட்டுள்ள பாதைகளில் நடந்து சென்று ரசிக்கலாம் என்பது இப்பகுதியின் சிறப்பாகும்.

.jpeg)
Comments
Post a Comment