நயகரா அருவியின் வியத்தகு உண்மைகள்

 நயகரா அருவி யு.எஸ்.ஏ., மற்றும் கனடா எல்லையில் அமைந்துள்ள மிக முக்கியமான சுற்றுலாதலமாக விளங்குகிறது. இது உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இயற்கை விரும்பிகளின் கனவு பூமியாக உள்ளது.

 

நயாகரா அருவி

பிரம்மாண்டமாய் பயங்கர இரைச்சலுடன் விழும் அருவி, நீர்வீழ்ச்சியால் உண்டாகும் வெண்புகை போன்ற நீர்த்திவலைகள், அருவியைச் சுற்றி அமைந்துள்ள பூங்காக்கள் மற்றும் அதிநவீன ஹோட்டல்கள் என பல விஷயங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.

நயகரா நீர்வீழ்ச்சி எங்கு, எப்படி உருவாகிறது? 

அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு மக்களுக்கு இயற்கை அன்னை வழங்கிய அருங்கொடையாக நயகரா உள்ளது, ஒரு மிகப்பெரிய ஏரியிலிருந்து மற்றொரு ஏரிக்கு நீர் மாறும் நிகழ்வே நயகார நீர்வீழ்ச்சியாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடா எல்லையில் 5 மிகப்பெரிய ஏரிகள் இருப்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரியும். இந்த 5 மிகப்பெரிய ஏரிகள் நம்மூர் ஏரிகளை போன்றவை அல்ல. ஒவ்வொன்றும் நம் தமிழ்நாட்டின் பரப்பளவுக்கு சமமானவை என்றால் அவற்றின் நீர் இருப்பை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

 5 ஏரிகளில் ஒன்றான ஈரி ஏரியிலிருந்து ஒன்டாரியோ ஏரிக்கு நீர் மாறுகிறது. பிரம்மாண்டமாய் இடிமுழக்கத்துடன் விழும் நீர்வீழ்ச்சியிலிருந்து எழும் நீர்ப்புகை நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள இடங்களை ஈரப்பதமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்துள்ளது.

 நயகரா அமைவிடம் மற்றும் பகுதிகள்

 நயகரா அருவி அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் பவலோவுக்கு வடக்கு வடகிழக்காக 30 கி.மீ., தொலைவிலும், கனடா நாட்டின் டொரோன்டா நகரிலிருந்து தென்மேற்கு திசையில் 120 கி.மீ.,தொலைவிலும் அமைந்துள்ளது.

 இது மூன்று பகுதிகளாக உள்ளது. அமெரிக்காவில் அமைந்துள்ள அருவிப்பகுதி அமெரிக்கன் அருவி என்றும், கனடா நாட்டினுள் அமைந்துள்ள பகுதி ‛ஹார்ஸ்ஷூ’ அருவி என்றும் அழைக்கப்படுகிறது. மேலே இருந்து பார்த்தால் ஒரு குதிரையின் பாதம் போன்று தோன்றுவதால் கனடா நாட்டு அருவி அவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த இரு நாட்டு அருவிகளுக்கு நடுவே மற்றொரு சிறிய அருவி உள்ளது. அது ‛பிரடெல்வெயில்’ அருவி என்று அழைக்கப்படுகிறது.

 கனடா நாட்டின் ‛ஹார்ஸ்ஷூ’ அருவிக்கும் அமெரிக்க அருவிக்கும் இடையே உள்ள தீவு ‛கோட் ஐலேண்ட்’ என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க அருவி பகுதியில் ‛லூனா என்ற மற்றொரு தீவும் அமைந்துள்ளது. அமெரிக்க அருவியானது கனடா அருவியை காட்டிலும் சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளதால் நீரின் பெரும்பாலான பங்கு கனடா அருவியில் கொட்டுகிறது.

 நயகரா அருவிகளின் உயரம் மற்றும் அகலம்

 அமெரிக்க அருவியின் உயரம் 176 அடியாகவும் அகலம் 1075 அடியாகவும் உள்ளது. கனடா அருவியின் உயரம் 167 அடியாகவும் அகலம் 2600 அடியாகவும் உள்ளது. இரு அருவிகளுமே பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். நயகரா அருவியில் ஒரு விநாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் பாய்கிறது.

நயகரா அருவியின் நீர் ஆதாரம்

 நயகரா அருவிக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது ஈரி ஏரியாகும். இந்த ஏரிக்கு ஆதாரமாக டெட்ராய்ட் நதி உள்ளது. இந்த நதியின் நீரானது ஈரி ஏரியில் கலக்கிறது. ஈரி ஏரியின் மொத்த நீளம் 400 கி.மீ., இதன் சராசரி அகலம் 92 கி.மீ., சராசரி ஆழம் 60 அடி. 

பனிக்காலத்தில் இந்த ஏரியின் மொத்த நீர்ப்பரப்பும் உறைந்து விடுகிறது. மேலும் பல மீட்டர் உயரத்திற்கு பனிப்படலம் உருவாகிறது. கோடைகாலத்தில் இந்த பிரம்மாண்ட பனிப்படலம் உருகுவது நயகரா அருவிக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. ‛ஈரி’ ஏரியில் கலக்கும் ‛டெட்ராய்ட்’ அருவியும் நயகரா அருவியின் மற்றொரு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

 நயகரா அருவிக்கு அருகே செல்லும் அனுபவம்

 ‛பெர்ரி’ போட் மூலமாக நயகரா அருவிக்கு அருகே செல்லும் அனுபவம் ஒருவருக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆர்ப்பரித்து விழும் அருவியின் பயங்கர இரைச்சலும், குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர்புகையும் நுங்கும் நுரையுமாக செல்லும் நீரோட்டமும் படகில் அருவிக்கு அருகில் செல்பவர்களுக்கு ஒரு திகிலான அனுபவத்தை கொடுக்கும்.

 அருவிக்கு அருகே தங்கும் அனுபவம்

 நயகரா அருவிக்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அருவிக்கு அருகே உள்ள நவீன நட்சத்திர ஹோட்டல்களில் சில நாட்களில் தங்கி அருவியின் அழகை ரசிக்க விரும்புவார்கள். பெரும்பாலான ஹோட்டல்களில் அறைகளில் அமர்ந்து கொண்டே நயகரா அருவியின் அழகை கண்டு ரசிக்கலாம். வெயில் நேரத்தில் அருவியின் நீர்ப்புகையினிடையே தோன்றும் வானவில் பார்ப்பவர்கள் மனதை மயக்கும். இரவு நேரங்களில் வண்ண விளக்குகளாலும் நயகரா அருவி பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும்

 
நயகரா அருவி

நீர் அரிப்பால் உயரம் குறையும் நயகரா அருவி

 நீர் அரிப்பால் நயகரா அருவியின் உயரம் ஒவ்வொரு வருடமும் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நயகரா அருவி விழும் பாறை கடினமில்லாத சுண்ணாம்பு பாறையாக இருப்பது தான். இதே நிலை நீடித்தால் ஒரு சில நூற்றாண்டுகளில் வேகமாக செல்லும் நீரோட்டமாக மாறிவிட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


Comments