கோதுமை உணவை நாம் ஏன் அடிக்கடி சேர்க்க வேண்டும்?

 கோதுமை தானியங்களில் மிக முக்கியமானதாகும். கோதுமையில் தயாரான உணவு உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. 

இந்தியா மட்டுமின்றி உலகில் பல நாடுகளில் கோதுமை விளைவிக்கப்படுகிறது. ஏனென்றால், பெரும்பாலான நாடுகளில் அன்றாட உணவு தயாரிப்பில் கோதுமை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் வட மாநிலங்களில் கோதுமை அதிகம் விளைகிறது. 

சப்பாத்தி

இந்தியாவில், குறிப்பாக தென் மாநிலங்களில் அரிசி மற்றும் கோதுமை முக்கிய பங்கு வகிக்கின்றன. அரிசியை பொறுத்தவரை வெள்ளை அரிசியைத்தான் பெரும்பாலான மக்கள் அன்றாட உணவு தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். 

ஆனால், கோதுமையில் உள்ள ஊட்டச்சத்துகள் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலான மக்களுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளை அரிசியில் உள்ள சத்துக்களின் அளவையும் கோதுமையில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவையும் ஒப்பிடுகையில் கோதுமை எவ்வளவு சிறந்தது என்பது எளிதாக புரியும். 

அரிசி மற்றும் கோதுமையில் உள்ள சத்துக்கள்

இந்த பதிவில் கோதுமை மற்றும் வெள்ளை அரிசியில் உள்ள சத்துக்களை ஒப்பிட்டு பார்க்கலாம். 

100 கிராம் கோதுமையில் 13.2 கிராம் புரதம், 72 கிராம் மாவுச்சத்து, 0.4 கிராம்

 சர்க்கரை, 10.7 கிராம் நார்ச்சத்து, 2.5 கிராம் கொழுப்பு, 38 மி. கி., கால்சியம், 136 மி. கி., மெக்னீசியம், 352 மி. கி., பாஸ்பரஸ், 376 மி. கி., பொட்டாசியம், 39 மைக்ரோ கிராம் போலேட்ஸ், 5.5 மி. கி., நியாசின், 0. 5 மி. கி., தியாமின். பி1 விட்டமின் 0.383 மி. கி., பி2  0.115 மி. கி.,பி3 5.464 மி. கி., பி5 0.954 மி. கி., பி6 0.3 மி.கி., அடங்கியுள்ளன. 

ஆனால், 100 கிராம் அரிசியில் 2.7 கிராம் புரதம், 10 மி. கி., கால்சியம், 0.4 கிராம் நார்ச்சத்து, மெக்னீசியம் 12 மி. கி., பாஸ்பரஸ் 35 மி. கி., பொட்டாசியம் 35 மி. கி., விட்டமின் பி1 0.163 மி. கி., பி2  0.013 மி. கி., பி3 1.476 மி. கி., பி5 0.39 மி. கி., என்ற அளவில் உள்ளன. 

பொதுவாக புரதம் தசை மற்றும் உடல் வளர்ச்சிக்கு அவசியமானது. அதே போல கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. நார்ச்சத்து உணவுப் பொருட்கள் ஜீரணம் ஆவதற்கும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. மெக்னீசியம் தசை மற்றும் நரம்புக்கு வலுவூட்டுகிறது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது. பி காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் உடம்பில் செல்கள் ஆரோக்கியமாக செயல்படவும், இரத்த சிவப்பு அணுக்கள் வளர்ச்சிக்கும், மூளை ஆரோக்கியமாக செயல்படவும் உதவுகிறது. 

மேலே சொல்லப்பட்டுள்ள அனைத்து ஊட்ட  சத்துகளும் நம் உடல் ஆரோக்கியமாக செயல்பட இன்றியமையாதவை என்பதில் சந்தேகமில்லை. இவை அனைத்தும் வெள்ளை அரிசியில் இருப்பதைவிட கோதுமையில் அதிக அளவில் உள்ளன. எனவே, நாம் கோதுமையை ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

கோதுமை

தீட்டப்படாத கோதுமையின் ஆரோக்கிய பலன்கள்

தீட்டப்படாத கோதுமையில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, விட்டமின்கள் நிறைய இருப்பதால் உடல் எடை கூடாமல் இருக்க உதவுகிறது. வெள்ளை அரிசியை விட குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல உணவாகிறது. உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்டிருப்பதால் உடல் பயிற்சியாளர்களுக்கு ஏற்ற உணவாகிறது. இது இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. 

கோதுமை ஒரு சிலருக்கு அலர்ஜி?

இவ்வளவு சிறப்பு மிக்க கோதுமை ஒரு சிலருக்கு அலர்ஜி ஆகும் என்பது உண்மையில் துரதிருஷ்டவசமானது. இதற்கு காரணம் அதிலுள்ள 'குலுடன்'  என்ற பசைத் தன்மை கொண்ட புரதம் என்று சொல்லலாம். 

இந்த புரதம் ஒரு சிலருக்கு சிறுகுடல் பகுதியில் தன்னிச்சையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி சிறுகுடல் ஜீரண தன்மையை பாதிக்கிறது. இதை மருத்துவர்கள் 'செலியாக்' நோய் என்று அழைக்கிறார்கள். 

செலியாக் தவிர்த்து உடல் சோர்வு, தலைவலி, தசை வலி போன்ற பிரச்சனைகளும் கோதுமை ஒத்துக் கொள்ளாதவர்களுக்கு ஏற்படும் என்று சொல்கிறார்கள். 

கோதுமை உணவை எப்படி சேர்க்கலாம்? 

ஊட்ட சத்துக்கள் நிறைந்த கோதுமையை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் காலை உணவில் சேர்த்துக்  கொள்ளலாம். சப்பாத்தியை பொறுத்தவரை நீரிழிவு உள்ள வர்கள் இரண்டு அல்லது மூன்று சப்பாத்திகள் எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு பிரச்சனை இல்லை என்றாலும் காலை வேளையில் மிதமான கோதுமை உணவு நல்ல பலன்களை கொடுக்கும். 

சப்பாத்தி தவிர தோசை, களி, பூரி என்று வெவ்வேறு வகைகளாக கோதுமை உணவை எடுத்துக் கொள்ளலாம். 

Comments