லம்பாசிங்கி: தென்னிந்தியாவின் பனி விழும் ஒரே மலை வாசஸ்தலம்

 தென்னிந்தியாவில் வசிப்பவர்கள் இயற்கை அழகை ரசிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அழகான கடற்கரைகள், மலைச்சிகரங்கள், ஏரிகள், மலைத் தோட்டங்கள் என எல்லாவற்றையும் தென்னிந்தியாவில் பார்த்து ரசிக்க முடியும். ஆனால், பனி படர்ந்த மலைகளை தான் இங்கு பார்க்க வாய்ப்பில்லை.

லம்பாசிங்கி

ஆந்திராவில் உள்ள லம்பாசிங்கி என்ற சிறிய மலைவாழிடத்தில் பனிக்காலத்தில் பனி படர்ந்த மலைகளை கண்டு ரசிக்க முடியும். பொதுவாக தென்னிந்தியர்கள் பனிபடர்ந்த  மலைச் சிகரங்களை காண காஷ்மீர், சிம்லா என்று நெடுந் தொலைவு பயணம் செய்ய வேண்டும். ஆனால், வடக்கு ஆந்திராவில் விசாகப்பட்டிணம் அருகே உள்ள லம்பாசிங்கி என்ற இடத்தில் பனிக்காலத்தில் காஷ்மீர் போன்ற சூழலை பார்த்து ரசிக்க முடியும். இதனால் இது ‛ஆந்திராவின் காஷ்மீர்’ என்று அழைக்கப்படுகிறது

லம்பாசிங்கி ஆந்திராவின் விசாகப்பட்டினத்திலிருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. கடல்மட்டத்திலிருந்து சுமார் 1.025 மீட்டர் உயரத்தில் இருப்பதால் பனிக்காலங்களில் இரவு நேர வெப்பநிலை பூஜ்யத்திற்கும் குறைவாக இருக்கும். பனிக்காலத்தில் ஒரு சில நாட்களில் எங்கும் வெண்போர்வை போர்த்தியது போல பனி படர்ந்திருக்கும். இது நாம் காஷ்மீரில் இருப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கும்.


பனிக்காலம் மட்டுமில்லாமல் கோடையிலும் இங்கு வெப்பநிலை10 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதால் இங்குள்ள இடங்களை கோடைகாலத்தில் சுற்றிப்பார்ப்பது சந்தோஷமான அனுபவத்தை கொடுக்கும். அழகிய மலைச் சிகரங்கள், பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள், அருவிகள் என்று பல விஷயங்கள் சுற்றுலா பயணிகளை இங்கு கவர்ந்திழுக்கும்.

லம்பாசிங்கியில் பார்க்க வேண்டிய இடங்கள்

அரக்கு பள்ளத்தாக்கு

இது லம்பாசிங்கிக்கு அருகில் உள்ள மிக அழகான இடம். பசுமையான சூழல், அருவிகள், காபி தோட்டங்கள், ரோஜா தோட்டங்கள், பசும் புல்வெளிகள், மாந்தோட்டம் என பல விஷயங்கள் இந்த இடத்தில் உள்ளன. இங்குள்ள காபி இல்லத்தில் நாம் புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட காபி கொட்டைகளை வாங்கலாம்.

கோதபள்ளி அருவி

லம்பாசிங்கிலிருந்து சுமார் 27 கி.மீ., தொலைவில் இந்த அழகான அருவி அமைந்துள்ளது. தற்போது சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் இங்கு வர துவங்கியுள்ளனர். சுத்தமான நீர், சில் என்ற காற்று, சுத்தமான இயற்கை சூழல் என அனைத்து விஷயங்களை இங்கு சுற்றுலா பயணிகளை மீண்டும் வர தூண்டும். நகரங்களில் இயந்திர வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இங்குள்ள இயற்கை சூழல் மனதிற்கு அமைதியை கொடுக்கும்.

அடர்ந்த காடுகளும் பனிமூட்டமும்

எல்லா மலைவாசஸ்தங்களைப் போலவே லம்பாசிங்கியைச் சுற்றி அடர்ந்த காடுகளும் புல்வெளிகளும் உள்ளன. இதமான தட்வெப்ப சூழலில் காடுகளை சுற்றிப்பார்ப்பது நல்ல அனுபவத்தை கொடுக்கும். பனிக்காலங்களில் இங்கு வரும் போது பனிப்படலம் நம் கண்களுக்கு விருந்து அளிக்கும்.

சுஸன் தோட்டம்

இது லம்பாசிங்கியில் உள்ள அழகி பூந்தோட்டமாகும். இதன் சிறப்பு என்னவென்றால் இங்கு நாம் அழகிய மஞ்சள் நிற பூக்களை அதிகமாக காண முடியும். மஞ்சள் நிற மலர்களின் நடுவே உலா வருவதும், போட்டோ மற்றும் வீடியோக்கள் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

தஜங்கி நீர்த்தேக்கம்

மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது இந்த நீர்த்தேக்கம். அழகான மலைகள், பனிபடர்ந்த பசும் புல்வெளிகள், சுத்தமான ஏரி நீர் போன்றவற்றை கண்டு ரசிக்கலாம். இது போன்ற இயற்கை சூழலில் நாம் சிற்றுண்டி அல்லது உணவு உண்டு கொண்டே நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சந்தோஷமாக பொழுதினை கழிக்கலாம்.

கொண்டகர்லா பறவைகள் சரணாலயம்

லம்பாசிங்கியில் அவசியம் காண வேண்டிய இடமாக உள்ளது. மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ஏரியில் நாம் பல வகையான வண்ணப் பறவைகளை பார்க்க முடியும். லம்பாசிங்கியின் அற்புத சுற்றுப்புற சூழ்நிலை பறவைகளுக்கு சிறந்த வாழிடமாக உள்ளது. அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ முடியும். இயற்கை காட்சிகள் மற்றும் பறவைகளை படம் பிடப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த இடம்.

இந்த இடத்திற்கு எப்போது வரலாம்?

லம்பாசிங்கின் பனி படர்ந்த சூழலை காண விரும்பினால் நவம்பர் முதல் ஜனவரி மாதங்கள் வரையிலான காலத்தில் வரலாம்.  குளிர் ஆகாது என்று நினைப்பவர்கள் கடுங் கோடை தவிர்த்து மற்ற மாதங்களில் வரலாம்

தங்கும் வசதி

லம்பாசிங்கியின் இயற்கை அழகை காண வரும் சுற்றுலா பயணிகள் அதை அங்கேயே தங்கி ரசிக்க வசதியாக ஆந்திர அரசால் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. அரசு விடுதி என்பதால் கட்டணம் அதிகமாக இருக்க வாய்ப்பு இல்லை. அரசு விடுதியில் தங்கி லம்பாசிங்கிற்கு அருகில் உள்ள இடங்களை அவசரம் இல்லாமல் பொறுமையுடன் கண்டு ரசிக்கலாம். அரசு விடுதி தவிர  ஆடம்பர ஹோட்டல்களும் லம்பாசிங்கியில் உள்ளன. அவற்றை நம் பட்ஜெட்டிற்கு தகுந்தவாறு தேர்வு செய்து கொள்ளலாம்

இந்த இடத்திற்கு எப்படி செல்வது?

லம்பாசிங்கிற்கு அருகில் உள்ள ஊர் விசாகப்பட்டிணம்.  இங்கிருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள லம்பாசிங்கிற்கு பஸ் வசதி உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம், நர்சிபட்டணம் ஆகும்.  லம்பாசிங்கிலிருந்து   31 கி.மீ., தொலைவில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது.

Comments